| ADDED : ஜூலை 11, 2011 11:40 PM
புதுச்சேரி : ஜிப்மரில் நடந்த வினாடி வினா போட்டியில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல் பரிசு வென்றது. ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நேற்று நடத்தப்பட்டது. இப்போட்டியில் பல்வேறு மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவர்கள் குழுவாக பங்கேற்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வம்சீதரன், நிகில், சுதர்சன் ஆகியோர் அடங்கிய குழுவினர் முதல் பரிசை வென்றனர்.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் பரிசையும், செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் மூன்றாம் பரிசையும் தட்டி சென்றனர். போட்டியை ஜிப்மர் டாக்டர் பாசு வழி நடத்தினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜிப்மர் இயக்குனர் டாக்டர் சுப்பாராவ் பரிசு, சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க இயக்குனர் டாக்டர் குருமூர்த்தி, ரத்த வங்கி தலைவர் டாக்டர் சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.