உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனூரில் பாழடைந்த மீன்-இறைச்சி அங்காடி

வில்லியனூரில் பாழடைந்த மீன்-இறைச்சி அங்காடி

புதுச்சேரி : பாழடைந்த வில்லியனூர் மீன், இறைச்சி அங்காடியை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என உள்நாட்டு மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவில் பின்புறம், உள்நாட்டு மீனவர்களின் வசதிக்காக பிரெஞ்சிந்திய காலத்தில் மீன் அங்காடி கட்டடப்பட்டது. இங்கு புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.இங்கு மீன், இறைச்சி ஆகியவை ஒரே இடத்தில் கிடைப்பதால் மார்க்கெட்டிற்கு மக்கள் அதிக அளவில் வருகின்றனர்.

உள்ளூர் மீனவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட மீன் அங்காடி தற்போது போதிய பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கிறது. அரை நூற்றாண்டாக மீன் அங்காடியை யாரும் கண்டு கொள்ளாததால் உச்சகட்ட சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது. மார்க்கெட்டின் மேற்குபக்க கடைகள் தூர்ந்துபோய் மண் மேடாக காட்சியளிகிறது. மீன் அங்காடி கால்வாய்கள் தூர்ந்து போயுள்ளது. இறைச்சி கழிவு நீர் வெளியேற வழியின்றி மீன் அங்காடிக்குள்ளேயே வாரக்கணக்கில் தேங்கி பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிய கழிவு நீரில் கொசு உற்பத்தியும் ஜோராக நடந்து வருகிறது. கழிவு நீரை பாத்திரம் கொண்டு கடை ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர். இதனால் மீன் வியாபாரிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மீன் மார்க்கெட்டை விட, கழிப்பிடத்தின் நிலைமை படுமோசமாக உள்ளது. தண்ணீர் வசதியில்லாதால் கழிப்பிடங்களை பயன்படுத்த முடியவில்லை. மீன் மார்க்கெட்டில் அவசர கோலத்தில் போடப்பட்ட சிமென்ட் ஷீட்கள் உடைந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. வேறு வழியின்றி மீனவ பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் சாலையில் அமர்ந்து வியாபாரம் செய்கின்றனர். ஆட்சிகள் மாறினாலும் மீன் இறைச்சி அங்காடி நிலை மட்டும் இன்னும் மாறவில்லை. இவற்றை புதுப்பிக்கக்கோரி வியாபாரிகள், மீனவர்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. எனவே இவற்றை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளின் நீண்டகால விருப்பமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ