உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒரே நாளில் 7 பேரிடம் ரூ. 1.72 கோடி அபேஸ்: சைபர் கிரைம் மோசடி கும்பல் அட்டூழியம்

ஒரே நாளில் 7 பேரிடம் ரூ. 1.72 கோடி அபேஸ்: சைபர் கிரைம் மோசடி கும்பல் அட்டூழியம்

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியாக வசித்த முதியவரிடம் மும்பை போலீஸ் என மிரட்டி ரூ. 1.45 கோடி அபகரித்த மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி எஸ்.வி.பட்டேல் சாலையைச் சேர்ந்தவர் கோவிந்த், 67; ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் வெளிநாட்டில் வசிக்கிறார். தனியாக வசித்த கோவிந்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன், மர்ம நபர் போன் செய்து, மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறினார்.உங்களின் மொபைல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது என, கூறினார். மறுநாள் மும்பை போலீசில் இருந்து பேசுவதாக கூறிய நபர், உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய உள்ளோம் என மிரட்டினர். 3வது நாள் வீடியோ கால் மற்றும் ஸ்கைப் மூலம் தோன்றி விசாரணை நடத்துவபோல் கோவிந்த் ஆதார் விபரங்களை கேட்டறிந்தனர்.வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது, சொத்து விபரம், வீட்டில் யார் யார் வசிக்கின்றனர், விசாரணை விபரங்களை யாரிடமாக கூறினால், கடுமையான நடவடிக்கை எடுப்போம் என, மீண்டும் மிரட்டினர். கோவிந்த் வங்கி கணக்கில் பணம் குறைவாக இருந்ததால், மியூட்சுவல் பண்டில் முதலீடு செய்திருந்த ரூ. 1.45 கோடி பணத்தை வங்கி கணக்கில் மாற்ற உத்தரவிட்டனர்.மீண்டும் வீடியோ காலில் தோன்றி, நீங்கள் முதியவராக இருப்பால், குற்ற வழக்கில் இருந்து விடுவிக்க பரிந்துரை செய்கிறோம். உங்கள் நேர்மையை சோதிக்க வங்கி கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு ஆர்.டி.ஜி.எஸ்., செய்யுங்கள். அடுத்த சில நிமிடத்தில் உங்கள் கணக்கிற்கே திருப்பி அனுப்பி விடுகிறோம்' என்றனர். அதனை நம்பிய கோவிந்த் தன் வங்கி கணக்கில் இருந்த ரூ. 1.45 கோடி பணத்தை அனுப்பினார். அதன்பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோவிந்த், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.புதுசாரம் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி. இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்து வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பிய அஷ்ரப் அலி ரூ. 22.21 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். லாஸ்பேட்டையைச் சேர்ந்த சரவணன், ரூ. 1.74 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். முத்தியால்பேட்டையைச் சேர்ந்த பொன்னுசாமியை தொடர்பு கொண்ட மர்ம நபர், எஸ்.பி.ஐ., இன்டர்நேஷ்னல் இன்வெஸ்மென்ட் மொபைல் ஆப்ளிகேஷன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பி ரூ. 2.80 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார்.புதுச்சேரியை சேர்ந்த சஞ்சீவ் குமாரின் வங்கி கிரெடிட் கார்டில் இருந்து ரூ. 36,000 பணம் எடுக்கப்பட்டது. வில்லியனுார் நெடுஞ்சேரலன் கார்டில் இருந்து ரிவார்டு பாய்ண்ட் இருப்பதாக கூறி ரூ. 23 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் எடுத்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 பேர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் 1.72 கோடி பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக புகார்களை பெற்று சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ