உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டியை ஏமாற்றி 10 சவரன் நகை அபேஸ் அரியாங்குப்பத்தில் துணிகரம்

மூதாட்டியை ஏமாற்றி 10 சவரன் நகை அபேஸ் அரியாங்குப்பத்தில் துணிகரம்

அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் நடந்து சென்ற மூதாட்டியை ஏமாற்றி, பட்ட பகலில் 10 சவரன் நகை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அரியாங்குப்பம் டோல்கேட் அரவிந்தர் நகரை சேர்ந்த ஆழ்தனியன் மனைவி ஆழ்ந்துமரிசெரார்தின், 77; இவர், நேற்று முன்தினம் காலை, பழைய கடலுார் ரோடு அரியாங்குப்பம் சர்ச்சுக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அரியாங்குப்பம் சிக்னல் வழியாக நடந்து சென்றபோது, வழியில் நின்ற அடையாளம் தெரியாத இருவர், மூதாட்டியை நிறுத்தி, வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் கவனமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நகைகளை கழற்றி பாதுகாப்பாக எடுத்து செல்லுமாறும் கூறிய அவர்கள், பேப்பரில் மடித்து தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.அவர்களை நம்பிய ஆழ்ந்துமரிசெரார்தின், தான் அணிந்திருந்த செயின், வளையல் என 10 சவரன் நகைகளை கழற்றி, டிப்டாப் ஆசாமிகளிடம் கொடுத்தார். மர்ம நபர்கள், அதனை காகிதத்தில் மடித்து கொடுத்தனர்.அதனை பையில் வைத்து எடுத்துச்சென்ற மூதாட்டி, வீட்டிற்கு சென்று பிரித்து பார்த்தபோது, கவரிங் நகைகளாக மாற்றி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் அந்த மர்ம நபர்கள், 10 சவரன் நகைகளுடன் மாயமாகி இருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக மூதாட்டி அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.

போலீசார் அலட்சியம்...

அரியாங்குப்பம், தவளக்குப்பம் சுற்றுவட்டார பகுதியில், பட்ட பகலில் நகை திருட்டு, பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியின், இரண்டு காவல் நிலைய கிரைம் போலீசார் மற்றும் பீட் போலீசார், ரோந்து சென்று கண்காணிப்பதில்லை என்பதால், குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ