அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
புதுச்சேரி: மருத்துவம் படிக்க அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு இட ஒதுக்கீட்டில் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்தாண்டு அரசு மருத்துவ கல்லுாரியில், 12 இடங்களும், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 240 அரசு இடங்களில், 24 இடங்களிலும் என, 36 இடங்கள் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களை கொண்டு அரசு நிரப்பி இருக்க வேண்டும்.ஆனால் அரசின் தவறான முடிவால் இந்தாண்டு, 14 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். இது அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த அரசு இழைக்கும் அநீதி. தாய் வழி மூலம் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் ஆறு மாதத்திற்கு முன்பே தீர்ப்பு அளித்தது. அதற்கான அரசாணை இன்றுவரை அளிக்கவில்லை. தாய்வழி மூலம் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் மேலும் ஆறு மாணவர்கள் மருத்துவ கல்வியில் பயில இடம் கிடைத்திருக்கும். இதிலும் அரசு அலட்சியத்துடன் செயல்பட்டதால் தகுதியுடைய மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மருத்துவ கல்லுாரிகளில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சேர என்னென்ன சலுகைகள் கொடுக்க முடியுமா அதை அரசு உடனடியாக செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.