கர்நாடகா அரசை கண்டித்து தீர்மானம் அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
புதுச்சேரி: மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசை கண்டித்து கூட்டத்தொடரில் கண்டன தீர்மானம் கொண்டு வர அ.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை; மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி கவர்னர் உரையின் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. கவர்னரின் திட்ட உரைகளை செயல்படுத்த, மத்திய அரசு நிதியுதவி வழங்குவதை மாநில அரசும், கவர்னரும் உறுதி செய்ய வேண்டும். கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவோம் என, ஆணவத்துடன் அறிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், கடைமடை பகுதியான காரைக்கால் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும். எனவே கர்நாடகாஅரசின் இந்த சட்டவிரோத செயலை கண்டித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் புதுச்சேரி அரசின் இந்த கூட்டத்தொடரில் கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும்.காரைக்கால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 7 பேருக்கு, விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை அரசு உடனடியாக செலுத்தி, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.