எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு அன்பழகன் புகார் மனு
புதுச்சேரி : ஏற்கனவே திறந்த எம்.ஜி.ஆர்., சிலையை, சிலர் மீண்டும் திறக்க முயன்றால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என, அ.தி.மு.க., அன்பழகன் புகார் மனு அளித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வில்லியனுாரில் எம்.ஜி.ஆர்., சிலை புனரமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. அந்த சிலையை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த ஒருவர் , மீண்டும் திறந்து வைப்பதாக விளம்பரம் கொடுத்துள்ளார். அ.தி.மு.க., கொடி, சின்னத்தை பயன்படுத்த உரிமையில்லை என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில், அ.தி.மு.க., தொண்டர்களை குழப்பும் வகையில், இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளனர்.இது தொடர்பாக, கலெக்டர், டி.ஐ.ஜி., சீனியர் எஸ்.பி., ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தும், நேரில் சந்தித்தும் முறையிட்டுள்ளோம். இதனை மீறி, எம்.ஜி.ஆர். சிலையை நாங்கள் திறப்போம் என்று அவர்கள் சென்றால், அதன் மூலம் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு காவல்துறை முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.