உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாகுபடிக்கு பிந்தைய மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு 

சாகுபடிக்கு பிந்தைய மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு 

புதுச்சேரி: புதுச்சேரி வேளாண்துறையின் தோட்டக்கலை அலுவலகம் மூலம் காய்கறி, மலர் சாகுபடிக்கு பிந்தைய மானியம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதுகுறித்து தோட்டக்கலை இணை இயக்குநர் சண்முகவேலு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  புதுச்சேரி வேளாண் துறை, கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகம் மூலம் 50 சதவீத மானியத்தில் காய்கறி மற்றும் மலர் விதைகள் வழங்கவும்,  சாகுபடிக்கு பிந்தைய மானியமாக ஆடிப்பட்டத்தில் நாட்டுக் காய்கறிகள், வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்குதல், கொடி வகை காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு பந்தல் அமைத்திடவும்,  விவசாயத்தை பன்முகப்படுத்தி காய்கறி உற்பத்தியினை அதிகரித்தல் போன்ற திட்டங்கள் இந்தாண்டு ஆடிப்பட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது.  இதற்கான விண்ணப்பங்கள் நாளை (29ம் தேதி) முதல் தாவரவியல் பூங்காவில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் மற்றும் அந்தந்த கிராமப் பகுதியில் உள்ள உழவர் உதவியகங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், வேளாண்துறை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, விவசாய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைந்து வரும் ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !