உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் கோவிலில் சர்வ திவ்ய தரிசனத்திற்கு ஏற்பாடு

மணக்குள விநாயகர் கோவிலில் சர்வ திவ்ய தரிசனத்திற்கு ஏற்பாடு

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் இன்று காலை தனி நபர் அர்ச்சனை ரத்து செய்யப்பட்டு, சர்வ திவ்ய தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தியையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் இன்று அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து, மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. மூலவருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்படுகிறது. உற்சவருக்கும் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு, வண்ண விளக்குகள் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.விநாயகர் சதுர்த்தியையொட்டி, இன்று தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில், சர்வ திவ்ய தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும், லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு திறக்கப்படும் நடை மதியம் 1:30 மணிக்கு மூடப்படுகிறது. தொடர்ந்து, மதியம் 3:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, இரவு 10:00 மணிக்கு மூடப்படுகிறது.காலை முதல் மாலை மங்கல இசை, வீணை, வயலின் மற்றும் நாட்டிய இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை