பாண்டி மெரினா ஒட்டக சவாரி: நிர்வாகம் மீது வழக்கு
புதுச்சேரி: வம்பாக்கீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரையில், சுற்றுலாத்துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டி, அதனை 10 ஆண்டிற்கு பராமரித்து கடைகளில் வாடகை வசூல் செய்து கொள்ள தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளது.பாண்டி மெரினா வணிக வளாகத்தை டெண்டர் எடுத்த நிறுவனம், அங்கு, 4 ஒட்டகம், 2 குதிரைகள் வரவழைத்து அதில் சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்தி சவாரி செய்யும் தொழிலையும் செய்தது. சுற்றுலா பயணிகள் சவாரி செய்து வந்த 13 வயது ஆண் ஒட்டகம் கடந்த ஜூலை மாதம் திடீரென உயிரிழந்தது. ஒட்டகம் உடல் பாண்டி மெரினா அருகே குழி தோண்டி புதைக்கப்பட்டது. ஒட்டகத்திற்கு சரியான உணவு வழங்காமல் கொலை செய்துள்ளனர் என, விலங்கு நல ஆர்வலர்கள் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தனர்.போலீசாரும், வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள் நோய் குறியியல் துறை தலைவர் குமார், பேராசிரியர்கள் அவிநாஷ்லக்கார்னி தலைமையிலான குழுவினர் முன்னிலையில் ஒட்டகம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.இந்நிலையில், விலங்கு நல ஆர்வலர் ஜெபின் அளித்த புகாரின்பேரில், பாண்டி மெரினா ஒட்டக சவாரி நடத்திய நிர்வாகத்தினர் மீது ஒதியஞ்சாலை போலீசார் பாரதிய நியாய சங்ஹீதா 325 ( விலங்கை கொல்வதன் மூலம் அல்லது ஊனப்படுத்துவன் மூலம் ஏற்படும் தீமை) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.சென்டூவ் புதுக்குப்பம் கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் சவாரி செய்யும் ஒட்டம் அதன் பராமரிப்பாளரை கடித்து காலால் மிதித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.ஒட்ட சவாரிக்கு பெற்று இருந்த அனுமதி கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதி ஆகிவிட்டதால் போலீசார் ஒட்ட சவாரிக்கு தடை விதித்து இருந்தனர். இந்நிலையில், விலங்கு வதை சிறப்பு சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்ய விலங்கு நல ஆர்வலர்கள் போலீசில் மீண்டும் மனு அளித்துள்ளனர்.