போலி பங்கு சந்தை செயலியில் தொழிலதிபர் ஏமாந்த ரூ.75 லட்சம் மீட்பு
சைபர் கிரைம் போலீசார் அதிரடி புதுச்சேரி: புதுச்சேரியில் போலி ஆன்லைன் பங்கு சந்தை செயலி மூலம் இழந்த ரூ. 75 லட்சம் பணத்தை, சைபர் கிரைம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஆன்லைன் மூலம் பங்கு சந்தை வர்த்தகம் செய்வதாக வந்த தகவலை நம்பி, ரூ.1 கோடி முதலீடு செய்தார். ஆனால், குறிப்பிட்டபடி லாபம் வரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முடியாமல், அந்த தொழிலதிபர் ஏமாற்றப்பட்டார்.போலியான மொபைல் செயலி மூலம் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆன்லைனில் தொழிலதிபர் இழந்த ரூ. 75 லட்சம் பணத்தை மீட்டு கொடுத்தனர். இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் காவலர் ஜலாலுதீன் ஆகியோருக்கு, தொழிலதிபர் நன்றி தெரிவித்தார்.சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'இதுபோன்ற ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடியில் சிக்கி, கடந்தாண்டு மட்டும் ரூ. 30 கோடிக்கும் மேல், புதுச்சேரி சேர்ந்தவர்கள் பலர் பணத்தை இழந்துள்ளனர். எனவே, இணைய வழியில் அல்லது ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி, எந்த ஒரு பங்கு வர்த்தகம் மற்றும் பணத்தையும் முதலீடு செய்யும் செயலில் இறங்கி, பொது மக்கள் பணத்தை இழக்க வேண்டாம்' என்றனர்.