மூதாட்டியிடம் செயின் பறிப்பு
புதுச்சேரி : முதலியார்பேட்டையில் மூதாட்டியிடம் 50 கிராம் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரை சேர்ந்தவர் இன்பசேகரன், 65; ஓய்வு பெற்ற மின்துறை உதவி பொறியாளர். இவரது மனைவி கமலம், 61; இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், அப்பகுதி விநாயகர் கோவிலுக்கு சென்றார். பின், வீட்டிற்கு தனியாக சென்றபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள், அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றனர்.சுதாரித்துக்கொண்ட கமலம், தாலியை இறுகப் பிடித்ததால், அதிலிருந்த மாங்கல்யத்தை தவிர 50 கிராம் தங்க செயினை மர்மநபர்கள் பறித்து கொண்டு, தப்பிச்சென்றனர்.புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதி சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.