மூதாட்டியிடம் நுாதன முறையில் செயின் பறிப்பு
திட்டக்குடி,: சாலை அளவீடு அதிகாரி எனக்கூறி மூதாட்டியிடம் நுாதன முறையில் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தொளார் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி செல்லம்மாள்,80; கணவரை இழந்த இவர், தனது மகன் வீட்டின் அருகே தனியாக வசித்து வருகிறார்.நேற்று மதியம், இவரது வீட்டிற்கு வந்த 40 வயது நபர், சாலை அளவிடும் அதிகாரி எனவும், சாலை அகலப்படுத்தும்போது, உங்கள் வீடு இடிபடும். உங்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க போட்டோ எடுக்க வேண்டும் என்றார். மேலும், போட்டோ எடுக்கும்போது தாங்க செயின் போட்டிருக்கக்கூடாது என்றார்.உடன், செல்லம்மாள் தான் அணிந்திருந்த 2 சவரன் செயினை கழற்றி, தலையணை கீழே வைத்துவிட்டு போட்டோ எடுத்துக் கொண்டார்.பின்னர் அந்த நபர், வீட்டின் தோட்டத்திற்கு சென்று இளநீர் பறித்து குடித்தார். பின்னர், செல்லம்மாளிடம் சற்று நேரம் பேசிவிட்டு கிளம்பி சென்றார். அதன்பிறகு, செல்லம்மாள் மாலை 6:00 மணிக்கு தலையணை கீழே வைத்த செயினை எடுக்க சென்றபோது, செயின் திருடு போயிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.