தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்
புதுச்சேரி : வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கட்சியினர் 300பேர் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்., கட்சியில் நேற்று இணைந்தனர்.என்.ஆர். காங்.,கட்சியின் 15ம் ஆண்டு விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசுகையில், கட்சியை தமிழகப் பகுதிக்கும் விரிவுப்படுத்தி, நிர்வாகிகளை நியமித்து வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி கட்சியினருடன் போட்டியிட தயாராகி வருவதாக அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து வேலுார் மாவட்டத்தை சேர்ந்த பரத்குமார் என்பவரின் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் நேற்று புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்திய சுவாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்., கட்சியில் இணைந்தனர்.அப்பொழுது முதல்வர் ரங்கசாமி பேசுகையில், அகில இந்திய என். ஆர்.காங்., கட்சி துவங்கும் போதே, தமிழகத்திலும் கட்சியை வளர்த்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் பல தலைவர்கள் என்னிடம் வந்தனர். நான் யாரிடமும் செல்லாமல், அ.தி.மு.க., கூட்டணியுடன் புதுச்சேரியில் ஆட்சி அமைத்தேன். தற்போது பாஜ., கூட்டணியுடன் ஆட்சி நடத்தி வருகிறேன்.நான் தமிழகப் பகுதிகளுக்கு செல்லும்போது, அப்பகுதி மக்கள் மற்றும் எனது நண்பர்கள் தமிழகத்திலும் என் ஆர்.காங்., கட்சி வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளிக்கும் விதத்தில் வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை பொறுத்து போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைவதற்காக கேட்டு வருகின்றனர். அதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதலில் இணைந்துள்ளனர். புஸ்சி ஆனந்த் மற்றும் விஜய் எனது நண்பர்கள். அதனால் சந்திக்கின்றனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகள் பற்றி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் பரபரப்பு
புதுச்சேரியில், என்.ஆர்.காங்., கட்சி தொடங்கிய 15 ஆண்டில் இருமுறை காங்.,-தி.மு.க., கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற்று முதல்வரான ரங்கசாமி, தற்போது, தமிழகத்திலும் கட்சியை விரிவுபடுத்த தீவிரம் காட்டி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.