நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அவசியம் மகளிர் தின விழாவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு
வில்லியனுார் : புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், கரிக்கலாம்பாக்கத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது.விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பேசியதாவது:பாரதி கண்ட கனவை நனவாக்கும் வகையில் புதுச்சேரியில் பெண் பிள்ளைகள் அனைவரும் படித்து வருகின்றனர். தற்போது புதுச்சேரியில் எடுக்கப்பட்ட அரசு வேலையில் அதிக அளவில் மகளிர் இடம் பெற்றுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் வேண்டும் என்று இந்த அரசு பல திட்டங்களை கொண்டு வந்தது. பெண்கள் பெயரில் சொத்து வாங்கும் போது பாதி செலவில் பத்திர பதிவு, கருவுற்ற தாய்மார்களுக்கு சத்துணவு திட்டம், பெண் குழந்தைகள் பிறக்கும் போதே அவர்களின் பெயரில் ரூ. 50 ஆயிரம் டிபாசிட், சமையல் அறையில் பெண்கள் புகையால் பாதிக்க கூடாது என, இலவச அடுப்புடன் காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது.சுய தொழில் செய்ய மகளிர் குழுக்களுக்கு நிதியுதவி வழங்கியது. பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருத்தால் கடுமையான தண்டனை கிடைக்கும். பள்ளி மற்றும் பணி செய்யும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பிற்காக புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு அவசியமாக உள்ளது.இவ்வாறு முதல்வர் பேசினார்.அரசு செயலர் ஜெயந்த்குமார் ரே, மகளிர் ஆணைய தலைவர் நாகஜோதி, நல அதிகாரி சத்தியபிரியா உட்பட பலர் பங்கேற்றனர். செயல்களை துரிதப்படுத்துதல் என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. துறை இயக்குனர் முத்து மீனா நன்றி கூறினார்.