வியாபாரிகளுக்கு அரசு துணை நிற்கும் முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை
புதுச்சேரி : புதுச்சேரியில் வியாபாரிகளுக்கு எப்போதும் அரசு துணை நிற்கும் என, முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் வணிகர் சங்கம் இணைந்து வணிக திருவிழாவை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த வணிக திருவிழாவில் நுகர்வோர் வாங்கும் பணத்தின் மதிப்பிற்கு ஏற்ப பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டு, சிறப்பு பரிசுகள், பொருட்கள், ஒவ்வொரு ஆண்டும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரியில் வியாபாரம் கூடுதலாகவும், வணிகர்களின் பொருளாதாரம் மேம்பட்டும் வருகிறது. மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் புதுச்சேரிக்கு குவிந்து வருவதால், சுற்றுலா வளர்ச்சியும், அதிகரித்து வருகிறது.இந்நிலையில் புதுச்சேரி சுற்றுலாத்துறை மூலம், 2024-25ம் ஆண்டிற்கான, வணிகத்திருவிழாவை கொண்டாட முதல்வர் ரங்கசாமி தலைமையில், அதிதி ஓட்டலில் நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கர், பாஸ்கர், ரமேஷ், அரசு செயலர் ஜெயந்தகுமார் ரே மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள், புதுச்சேரி, காரைக்கால், மாகி பகுதி வணிகர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், நடப்பாண்டில் வணிக திருவிழாவை வரும், அக்., 10ம் தேதி ஆயுத பூஜையன்று துவங்கி, 202௫ம் ஆண்டு ஜன., 20ம் தேதி வரை, 102 நாட்களுக்கு, புதுச்சேரி, காரைக்கால், மாகி ஆகிய பிராந்தியங்களில் நடத்துவது என முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:புதுச்சேரி நேருவீதிக்கு சென்றாலே, தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்ற நிலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இங்கு கடலுார், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இங்குள்ள வியாபாரிகள் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். புதுச்சேரி சிறந்த மாநிலமாக திகழ வேண்டும். சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. வியாபாரிகளுக்கு எப்போதும் அரசு துணை நிற்கும்' என்றார்.