பாட்டு கச்சேரியில் மோதல் தீ வைத்து பைக் எரிப்பு
புதுச்சேரி : கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், பைக்கை தீ வைத்து எரித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகே ராஜா நகரில் ராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு திருவிழாவை அப்பகுதி மக்கள் இணைந்து நடத்தி வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த பத்வா (எ) பத்மநாபனை திருவிழாவிற்கு அழைக்கவில்லை.நேற்று முன்தினம் இரவு திருவிழாவில் பாட்டு கச்சேரி நடந்தது. அப்போது, பத்மநாபன் அவரது நண்பர்கள் விக்கி, தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை போலீசார் மூவரையும் கண்டித்து அனுப்பினர்.இந்நிலையில் அதிகாலை 3:00 மணிக்கு கோவில் விழா மேடை அருகே வந்த பத்மநாபன், விக்கி, தமிழ்செல்வன், விழா மேடை அருகே இருந்த சேர்களை அடித்து உடைத்து வீசியதுடன், அங்கிருந்த பைக்கை தீ வைத்து எரித்தனர். அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.