மகளிர் போலீஸ் மூலம் இயங்கிய சைபர் கிரைம் பிரிவு; 9 போலி இணையதள பக்கங்கள் முடக்கம்
புதுச்சேரி : மகளிர் தினத்தையொட்டி முழுக்க முழுக்க மகளிர் காவலர்களை கொண்டு சைபர் கிரைம் போலீஸ் நிலையம் இயங்கியது. 9 போலி இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டன.மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் நேற்று பதிவான அனைத்து புகார்களையும், சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் மட்டுமே கையாண்டு புகார் களுக்கு தீர்வு கண்டு நடவடிக்கை எடுத்தனர்.முன்னதாக எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் மக்கள் மன்றம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தங்களின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர். பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 18 மொபைல் போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி கூறுகையில், 'கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இணைய வழி மோசடிக்காரர்கள் பயன்படத்திய 163 மொபைல் எண்கள் முடக்கப்பட்டண. 178 ஐ.இ.எம்.ஐ., மொபைல்களும் முடக்கப்பட்டன.இதுபோல், பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் ஏமாற்றி பணம் மோசடி செய்யும் 9 போலி வெப்சைட்டுகளும் முடக்கப்பட்டுள்ளது' என்றனர்.