| ADDED : ஏப் 27, 2024 04:32 AM
புதுச்சேரி : 'தினமலர்' செய்தி எதிரொலியாக உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் ஒயிட் டவுனில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்தார்.புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் உள்ள கழிவறைகள் சரியான பராமரிப்பின்றி பாழடைந்தும் மற்றும் பூட்டியும் கிடந்தது. இதை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதையொட்டி நேற்று மாலை உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் ஆம்பூர்- செஞ்சி சாலை மற்றும் ஒயிட் டவுனில் உள்ள கழிவறைகள், கழிவறைகள் புதிதாக கட்டப்பட்ட உள்ள இடங்களை, அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.அவர் கூறுகையில், 'புதுச்சேரி ஒயிட் டவுனில் பத்து இடங்களில் மத்திய அரசு மற்றும் தனியார் நிதி பங்களிப்புடன் அதிநவீன கழிவறகைள் கட்டப்பட உள்ளன. இதற்காக ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், மத்திய பிரதேசம் மாநிலம் இந்துாரில் உள்ள கழிவறைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அதைத் தொடர்ந்து கட்டப்படும் கழிவறைகள் சில கட்டண முறையிலும், சில தனியார் நிறுவனங்கள் மூலமும் பராமரிக்கப்படும்.இதற்காக வெளி மாநிலங்களில் உள்ளதுபோல் கீழ் தளத்தில் கழிவறை, மேல் தளத்தில் 'காபிட்டேரியா' உணவகம் மற்றும் அந்த நிறுவனத்தின் விளம்பரங்களை அமைத்துக் கொள்ளலாம்.மேலும் சுற்றுலா பயணிகள் தங்களது உடமைகளை வைத்து செல்லும் லாக்கர், நாப்கின்களை எரிக்கும் வசதிகள் உள்ளிட்டவை ஆயுஷ் மருத்துவமனை வளாகம், ஆம்பூர் சாலை, செஞ்சி சாலையில் புதியதாக கட்டப்படும் கழிப்பிடங்களில் அமைகிறது' என்றார்.ஆய்வின்போது செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனி ராஜா, நகராட்சி சுகாதார அதிகாரி ஆர்த்தி, பொது சுகாதார உதவி பொறியாளர் கிருஷ்ணன மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.