தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., இளைஞர் அணி சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டை முன்னிட்டு, பேச்சுப் போட்டி நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், லப்போர்த் வீதியில் உள்ள, அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. சம்பத் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா, பேச்சுப் போட்டியை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.புதுச்சேரி மாநிலத்தில் வரும், 26ம் தேதி புஸ்சி வீதி, ரோஸ்மா திருமண நிலையத்தில் போட்டியை நடத்துவது என்றும், இதில், 300 கல்லுாரி மாணவ - மாணவியரை பங்கேற்க வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.இப்போட்டியில் கட்சி தலைமையால் நியமிக்கப்படும் நிர்வாகிகள், நடுவர்களாக இருந்து, சிறப்பாக பேசும் மாணவர்களை தேர்வு செய்வர். அவர்கள், தமிழக அளவில் நடக்கும் பேச்சுப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நித்திஷ், முகிலன், ரெமி எட்வின், உத்தமன், தாமரைக்கண்ணன், கிருபாசங்கர், அகிலன், தமிழ்பிரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.