கடலில் துள்ளி குதித்த டால்பின்கள்
புதுச்சேரி: புதுச்சேரி கடலில் துள்ளி குதித்த டால்பின்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். புதுச்சேரி கடலில் நேற்று டால்பின்கள் துள்ளி குதித்து நீந்தின. அவற்றை கடற்கரையில் திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். மொபைல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.புதுச்சேரி கடல் பகுதிகளில் டால்பின்களின் திடீர் வருகை குறித்து கடல் வாழ் உயிரின உயர் ஆய்வு மைய பேராசிரியர் ஆறுமுகம் கூறுகையில், 'இந்திய பெருங்கடல் பகுதிககளில் டால்பின்கள் பரவலாக காணப்படுகின்றன. டால்பின்கள் பொதுவாக நடுக்கடலில் தான் கூட்டமாக இருக்கும். இருப்பினும் இனப்பெருக்க காலத்தில் நடுக்கடலில் இருந்து கடற்கரை நோக்கி வந்து திரும்பி செல்லும். அதன்படியே புதுச்சேரி கடல் பகுதியில் முகாமிட்டு சென்றுள்ளன' என்றார்.மீனவர்கள் கூறுகையில், 'எங்களுக்கு டால்பின்கள் மிகவும் பிடிக்கும். நாங்கள் அவற்றை பிடித்ததில்லை. மாறாக அவை எங்களுக்கு மீன் பிடிக்க உதவுகின்றன. சூரை மீன்கள் டால்பின்களைச் சுற்றியே செல்லும். டால்பின்கள் தென்படும் இடங்களில் சூரை மீன்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். சூரை மீன் மட்டுமல்ல, மற்ற மீன்களையும் கண்டுபிடிக்க டால்பின்கள் உதவுகின்றன.தவறுதலாக வலையில் டால்பின்கள் சிக்கினால் கூட, வலைகளைக் கிழித்து அவற்றை காப்பாற்றுகிறோம். கடலில் டால்பின்கள் நமக்கு மிகவும் முக்கியம்' என்றார்.