உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருநள்ளார் சனீஸ்வரன் கோவில் பெயரில் போலி வெப்சைட் துவக்கி மோசடி

திருநள்ளார் சனீஸ்வரன் கோவில் பெயரில் போலி வெப்சைட் துவக்கி மோசடி

காரைக்கால்,: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பெயரில் போலி வெப்சைட் துவக்கி, பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில், உலகப் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை விமர்சையாக நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.சனிக்கிழமைகளில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்களுக்கு இலவச தரிசனம், கட்டண தரிசனம் என, தனித்தனியாக கோவில் நிர்வாகம் டிக்கெட் வசதி செய்துள்ளது. மேலும், பக்தர்களுக்கு கோவில் பிரசாதம் மற்றும் அபிஷேகம், அர்ச்சனை, அன்னதானம் செய்வதற்கும், பரிகார பூஜைக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து தொகை செலுத்தினால், கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் அனுப்பப்படுகிறது.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கோவில் தேவஸ்தானம் பெயரில், போலி வெப்சைட் தொடங்கி சனீஸ்வர பகவான் புகைப்படத்துடன் தரிசனம், அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் பிரசாதம் பெறுவதற்காக, குறிப்பிட்ட தொகையை மர்ம நபர்கள் வசூலித்து வந்தது தெரியவந்தது. கோவில் ஊழியர்கள் சிலர் உதவியுடன் போலி இணையதளம் வாயிலாக, பரிகார பூஜை செய்வதாக வெளி மாநிலம், வெளிநாட்டு பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பக்தர்கள் அளித்த தகவலின்பேரில், கோவில் நிர்வாகம் காரைக்கால் சீனியர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தது. இந்த மோசடி குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பரிகார பூஜை செய்வதாக கூறி, வெளிநாட்டினரை ஏமாற்றி பணம் பறித்த கோவில் ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது பக்தர்களுக்கு கோவில் பிரசாதம் அனுப்புவதாக போலி இணையதளம் துவங்கி, பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !