காலம் க டந்து நிற்கும் சுண்ணாம்பாறு பாலம்
பிரெஞ்ச் ஆட்சி காலத்தில் புதுச்சேரியில் அடிக்கடி போர் மேகங்கள் சூழ்ந்து, பிரிட்டிஷார் - பிரஞ்சியர்கள் படைகள் பீரங்கி குண்டுகள் பறக்க, மோதிக்கொண்டனர்.அசுர பலம் கொண்ட பிரிட்டிஷார் புதுச்சேரியை கைப்பற்றி, பிரெஞ்சியர்களின் கோட்டைகளை முற்றிலும் அழித்தனர். அதன் பிறகு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு, இழந்த பகுதிகளை அவ்வப்போது பிரெஞ்சியர்கள் பெற்றனர். அப்படி, இரு மாபெரும் ராஜியங்களுக்கு இடையே இணக்கமான சூழ்நிலை, நிலவியபோதெல்லாம் புதுச்சேரி, தமிழக மக்களுக்கும் நன்மைகளும் விளைந்தன. அதில் ஒன்று தான் கடலுார் சாலையில் நோணாங்குப்பத்தில் சங்கராபரணியாற்றில் கட்டப்பட்ட பிரமாண்டமான சுண்ணாம்பாற்று பலம்.வர்த்தகத்தை விரிவுப்படுத்த எண்ணிய பிரெஞ்சியர்கள் - பிரிட்டிஷார் இணைந்து இந்த பாலத்தை முதன் முதலாக 1857ம் ஆண்டு தவளக்குப்பம் - அரியாங்குப்பம் இடையே சங்கராபரணியாற்றில் கட்டி முடித்தனர். அப்போது இந்த பாலத்தை கட்ட 39,000 ரூபாய் செலவானது. இந்த செலவு தொகையை பிரிட்டிஷ் அரசும், பிரெஞ்ச் அரசும் சமமாக ஏற்றன.இருப்பினும் 1884ல் சங்கராபரணியாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் பாலத்தை அசைத்து பார்த்தது. கரைகளை கரைத்து கொண்டு கரைபுரண்டோடிய வெள்ளத்தில், இப்பாலமும் அடித்து செல்லப்பட்டு சுக்கு நுாறாக சிதறியது. புதுச்சேரி, தமிழக கிராமங்கள் போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டன. இது வர்த்தகத்தை பல பகுதிகளுக்கு விரிவுப்படுத்த எண்ணிய பிரிட்டிஷார் -பிரெஞ்சியர்களுக்கு பேரிடியாக அமைந்தது. அதனால் மீண்டும் 1888-90ம் ஆண்டில் சுண்ணாம்பாறு பாலத்தை இணைத்து முன்பை விட வலுவாக கட்டி எழுப்பினர். அப்போதும் இதற்கான செலவினை பிரிட்டிஷ் அரசும் பிரெஞ்சு அரசும் சரிசமமாக பங்கிட்டு ஏற்றுக்கொண்டன. இது தொடர்பாக கல்வெட்டு ஒன்றும் சுண்ணாம்பாற்று பாலத்தில் பதிக்கப்பட்டுள்ளது. அது இன்றும் உள்ளது. அதில், பிரஞ்சு கவர்னர்கள் பிக்யே (1888-89) மற்றும் நுாயே காலத்தில் (1889-91) எம்.ஏ., மதிவேல் என்ற இயக்குனர் தலைமையில் எம்.எப். ழூமே என்ற கொலோனிய பொறியாளர் மேற்பார்வையில் இ.தெதார் என்ற ஒப்பந்தக்காரர் இந்த பாலத்தை கட்டியதாக கல்வெட்டு பாலத்தை பற்றிய அரிய தகவல் அடங்கியுள்ளது.468 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் வெறும், செங்கல், கிளிஞ்சல், சுண்ணாம்பினால் வலுவாக கட்டப்பட்டதால் சுண்ணாம்பாற்று பாலம் என்ற பெயரினை பெற்றது. அத்துடன், பிரெஞ்சியர்கள் - பிரிட்டிஷார் கட்டடகலை பாணியை இன்றும் காலம் கடந்து, பறைசாற்றி இந்த பாலம் கம்பீரமாக இன்றும் நிற்கிறது.