உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியில் மாகே அணி

பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியில் மாகே அணி

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரீமியர் லீக் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், ஏனாம் அணியை வீழ்த்தி மாகே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஸ்ரீராம் கேபிடல் வழங்கும், பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கின் 3வது சீசன், சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று மாலை 6.00 மணிக்கு நடந்த இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் ஜெனித் ஏனாம் ராயல்ஸ் அணியும், மாகே ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த ஏனாம் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள்  வேதாந்த் பரத்வாஜ், ஆதித்யா கர்வால் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்தனர். 25 பந்துகளில் 50 ரன் எடுத்து ஆதித்யா கர்வால் அவுட்டானர். வேதாந்த் பரத்வாஜ்  43 ரன் எடுத்து வெளியேறினார். பரமேஷ்வரன் 43, ராகுல் தோமர் 25 ரன்களில் அவுட்டாகினர். ஜெனித் ஏனம் ராயல்ஸ் அணி 9 விக்கெட்  இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. மாகே அணி தரப்பில் கரண் கண்ணன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின் களமிறங்கிய மாகே ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் 9, சவுரவ் சந்தா 1 ரன்னில் அவுட்டாகினர். பின் இணைந்த ராகவன் மற்றும் ரித்திக் சர்மா இருவரும் அதிரடியாக ஆடினர்.  ராகவன் 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். ரித்திக் சர்மா 45 பந்துகளில் சதம் கடந்தார். 18.1 ஓவர்களில் மாகே அணி 2 விக்கெட்டு இழப்புக்கு  224 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது. ரித்திக் சர்மா 48 பந்துகளில் (10 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள்) 113 ரன்களுடனும், ராகவன் 49 பந்துகளில் (8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) 99 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகன் விருது 113 ரன்கள் குவித்த ரித்திக் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணியும், மாகே ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோத உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ