காரைக்கால் அரசு பள்ளியில் படித்த இருவருக்கு மருத்துவ சீட்
காரைக்கால்: நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற காரைக்கால் அரசு பள்ளி படித்த இரு மாணவர்களுக்கு, மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது.காரைக்கால் மாவட்டத்தில் குலோத்துங்கன் கலெக்டராக இருந்தபோது, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வகையில், நீட் தேர்வு பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் பலர் பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்நிலையில் திருப்பட்டினம் அரசு பள்ளி மாணவி தேன்மொழி பிளஸ்2 தேர்வில் 552 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றதால், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அவருக்கு புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைந்துள்ளது. அதே போன்று, காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைபள்ளி மாணவர் ராஜேஷ், பிளஸ் 2 தேர்வில் 530 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றதால், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் ராஜேஷிக்கும், புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்தது.இருவருக்கும் புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வாழ்த்து தெரிவித்தார்.இதுகுறித்து மாணவி தேன்மொழி கூறுகையில்.,எனது தந்தை சந்திரசேகர் கூலி தொழிலாளி. குடும்ப சூழல் உணர்ந்து படித்தேன். பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன். அரசின் நீட் பயிற்சி உதவியாக இருந்தது. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதுடன், மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளதாக தெரிவித்தார்.மாணவர் ராஜேஷ் கூறுகையில், எனது தந்தை கோபால், தச்சு தொழிலாளி. சிரமமான குடும்ப சூழலில் படித்து, மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளதாக தெரிவித்தார்.