மனநல நல்வாழ்வு திட்டம் ஜிப்மரில் துவக்கம்
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் மாணவர்களின் மனநலன், மனவலிமை, உணர்வுபூர்வமான நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பு மாணவர் ஆலோசனை மற்றும் ஆதரவு மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம், மாணவர்களுக்கு மனநலம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்காக ஆண்டு முழுதும் ‘சரியான சிந்தனை’ என்ற முழுமையான நல்வாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஸ்வரூப் குமார் சாஹூ வரவேற்றார். இளநிலை பயிற்சி மருத்துவர்கள் சங்கம் மற்றும் ஜிப்மர் மாணவர் சங்கம் பிரதிநிதிகள் வாழ்த்தி பேசினர். ஜிப்மர் கல்வி பிரிவு டீன் விக்ரம் கடே தொடங்கி வைத்து பேசுகையில், ‘மாணவர்கள் எதிர்கொள்ளும் கல்வி மற்றும் தனிப்பட்ட சவால்களைச் சமாளிக்க வேண்டி இருக்கிறது. இதற்கு மனநலமும், உரிய நேரத்தில் உதவியை நாடுவதும் மிக அவசியம் என, குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் மன அழுத்த மேலாண்மை, நேர மேலாண்மை, யோகா, தளர்வுப் பயிற்சிகள், துாக்க சுகாதாரம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மேலும், கலை - கலாசார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளிலும் மாணவர்கள் பங்கேற்க ஊக்கமளிக்கப்படும். பேராசிரியர்கள், விடுதி காப்பாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உடலியல் துறை பேராசிரியர் வேல்குமாரி நன்றி கூறினார்.