உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக தமிழ் மாநாட்டில் புதுச்சேரி பெருமை இடம் பெறும் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

உலக தமிழ் மாநாட்டில் புதுச்சேரி பெருமை இடம் பெறும் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

புதுச்சேரி: உலக தமிழ் மாநாட்டில் புதுச்சேரியின் பெருமை இடம்பெறும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார்.புதுச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தில், முனைவர் ராமதாசு- பேராசிரியர் ராமன் எழுதிய அரிக்கமேடு என்ற நுால் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டு பேசியதாவது: புதுச்சேரி சிறிய மாநிலம். அதிக வருவாய் இல்லாத மாநிலம். ஆனால் வரலாற்று பின்னணி என்று வைத்துக்கொண்டால், மற்ற மாநிலங்களை காட்டிலும் செழிப்பானது. நம் புதுச்சேரி வரலாற்று புதையல் கொண்டது. மிகப்பெரிய அறிஞர்களுக்கு எல்லாம் இன்றைக்கும் அறிவை தேடுகின்ற இடமாக அரிக்கமேடு திகழ்ந்து கொண்டு இருக்கின்றது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகம் கொண்ட மனித குழுக்கள் புதுச்சேரியில் இருந்துள்ளது. புதுச்சேரி பற்றிய தகவல்கள், பொருட்கள் பிரான்ஸ் நாட்டின் மியூசியத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே அரிக்கமேட்டில் டிஜிட்டல் மியூசியம் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றோம். புதுச்சேரி பற்றிய தகவல்கள் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றை அப்படியே டிஜிட்டல் வடிவில் இங்கு வைக்க உள்ளோம்.புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். முதல்வர் ரங்கசாமி அதில் தீவிரமாக உள்ளார். அந்த மாநாட்டில், அரிக்கமேடு உள்ளடங்கிய புதுச்சேரி வரலாற்று பெருமை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளோம். அரிக்கமேடு குறித்த தகவல்கள் உலக நாடுகளுக்கு சென்றடைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., வாழ்த்து பேசினார். நுாலினை பழனி அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் புதுச்சேரி வக்கீல் சங்க முன்னாள் தலைவர் குமரன், ெஹலன் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ