கட்டாய வசூலால் செவிலியர்கள் புலம்பல்
புதுச்சேரி அரசு மருத்துவமனையில், 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். செவிலியர் நலனுக்காக செவிலியர் நலச்சங்கமும் இயங்கி வருகிறது.அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெறும் செவிலியர்களுக்கு, நலச்சங்கம் சார்பில் 8 கிராம் தங்க நாணயம் கொடுக்க வேண்டும் என, முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது 2 செவிலியர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். இதற்காக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து செவிலியர்களும் ரூ. 3,000 கட்டாயம் அளிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளனர். இதற்கு பல செவிலியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல ஆண்டுகள் வேறு ஏதேனும் மருத்துவமனையில் பணியாற்றி விட்டு பணி ஓய்வு காலத்தில் அரசு மருத்துவமனையில் சேர்ந்து பணி ஓய்வு பெறும் நபர்களுக்கும் 8 கிராம் தங்க நாணயம் வழங்க வேண்டுமா என, கேள்வி எழுப்புகின்றனர்.ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கும் உங்களுக்கு, ரூ.3,000 எல்லாம் ஒரு பணமா என நலச்சங்கம் கேள்வி கேட்பதால் செவிலியர்கள் மன வருத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு அரசு மருத்துவமனை நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.