புதுச்சேரி : புதுச்சேரியில் ஆப்ரேஷன் திரிசூல் மூலம் 150 ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிகாலையில் திடீர் சோதனை நடத்தி, 39 பேரை முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.புதுச்சேரியில் தேர்தல் காரணமாக ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் கடந்த 1 மாதம் ரவுடிகள் அட்டகாசம் இன்றி அமைதி காத்தனர். தேர்தல் முடிந்ததும், ரவுடிகளின் முதன்மையான தொழிலான கஞ்சா விற்பனையை மீண்டும் துவக்கினர். கஞ்சா விற்பனையில் யார் அதிகம் விற்பது என்ற போட்டியில், பெரியார் நகரில் ருத்ரேஷ் என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.அதே நாளில் அரியாங்குப்பத்தில் ரவுடி ஆனந்த் கொலை செய்யப்பட்டார். ஒரே நாளில் இரு கொலைகள் அரங்கேறியது, ரவுடிகள் மீண்டும் தங்களின் மாமூலான பணிக்கு திரும்பி விட்டனர் என்பதையே சுட்டிக் காட்டியது.இதனைத் தொடர்ந்து, போலீஸ் சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா உத்தரவின்பேரில், ரவுடி வீடுகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் ஆப்ரேஷன் திரிசூல் நேற்று காலை நடந்தது.அதன்படி, நேற்று காலை ரவுடிகள் வீட்டில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளார்களா என சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா மேற்பார்வையில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.கிழக்கு பகுதியில் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் பெரியார் நகர், கண்டாக்டர் தோட்டம், ஆட்டுப்பட்டி பகுதி யிலும், எஸ்.பி., வீரவல்லவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா உள்ளிட்ட போலீசார் எடையன்சாவடி சாலை, லெனின் நகர், அணைக்கரைமேடு பகுதியிலும் ரவுடிகள் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.தெற்கு பகுதியான அரியாங்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் எஸ்.பி., பக்தவச்சலம் தலைமையில் ரவுடிகள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 150 குற்ற பின்னணி கொண்ட நபர்களின் வீடுகளில் சோதனை நடந்தது.39 நபர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். 2 பேர் மீது ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒருவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ஒருவர் பிடிபட்டார். 31 நபர்கள் மீது தடுப்பு நடவடிக்கை கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கூறுகையில், 'இந்த சோதனை புதுச்சேரியை போதை பொருட்கள் மற்றும் ரவுடிகள் இல்லாத பிரதேசமாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். போலீஸ் தலைமையகத்தின் அறிவுறுத்தல்படி, வரும் காலங்களில் குண்டர் சட்டம் மற்றும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.