விநாயகர் சதுார்த்திக்கு பிறகு பந்த் ; எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவிப்பு
புதுச்சேரி : மின் கட்டண உயர்வை கண்டித்து விநாயகர் சதுார்த்திக்கு பிறகு பந்த் போராட்டம் நடத்தப்படும் என எதிர்கட்சி தலைவர் சிவா தெரிவித்தார்.மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற எதிர்கட்சித்தலைவர் சிவா கூறியதாவது:லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகும் புதுச்சேரியை ஆளும் என்ஆர்.காங்., பா.ஜ., அரசு பாடம் கற்றுக்கொள்ளும் என நினைத்தோம். ஆனால் தேர்தல் தோல்வியில் இந்த அரசு பாடம் கற்கவில்லை. தேர்தலின்போது நிறுத்திவைக்கப்பட்ட மின் கட்டண உயர்வை முன்தேதியிட்டு அறிவித்துள்ளனர். இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். இதன்பிறகும் மின் கட்டண உயர்வை அரசு ரத்து செய்யாவிட்டால், இண்டியா கூட்டணி கட்சிகள் மீண்டும் ஒன்றுகூடி ஆலோசித்து அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவோம். விநாயகர் சதுர்த்திக்கு பிறகு பந்த் போராட்டம் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:வரலாறு காணாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை கட்டணமாக ரூ.6, 300 யூனிட்டுக்கு மேல் ரூ.8 வசூலிக்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாவார்கள். மின் கட்டண உயர்வை திரும்பப்பெறும் வரை தொடர் போராட்டத்தை இண்டியா கூட்டணி நடத்தும். மின்துறை தனியார்மயத்தை கண்டித்தும், ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை நிறுத்தக்கோரியும் போராட்டங்கள் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.