உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு இடத்தில் சர்ச் கட்ட எதிர்ப்பு; நெல்லித்தோப்பில் இன்று அமைதி ஊர்வலம் 

அரசு இடத்தில் சர்ச் கட்ட எதிர்ப்பு; நெல்லித்தோப்பில் இன்று அமைதி ஊர்வலம் 

புதுச்சேரி: நெல்லித்தோப்பு பெரியார் நகரில், அரசுக்கு சொந்தமான இடத்தில், 'சர்ச்' கட்டப்படுவதை கண்டித்து, இன்று 15ம் தேதி அமைதி ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு பெரியார் நகர், 2வது மெயின்ரோடு, 5வது குறுக்கு தெரு சந்திப்பில், ஜாபர்பாய் தோட்டம் அருகே சமூக நலத்துறையின் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. பழுதடைந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்றப்பட்டது. அந்த இடத்தில், தற்காலிக கீற்று கொட்டகை கட்டி, புதிதாக 'சர்ச்' அமைக்க சிலர் முயற்சி மேற்கொண்டு வருவதை கண்டித்து, இந்து முன்னணி மாநில தலைவர் சணில்குமார் தலைமையில் நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, சர்ச் கட்ட திட்டமிட்டுள்ள இடத்தில், இந்து முன்னணி நிர்வாகிகள் விநாயகர் சிலை வைத்து, பூஜை செய்ய முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் சமாதானம் செய்தனர். அதைத் தொடர்ந்து, இந்து முன்னணி அமைப்பினர் கலைந்து சென்றனர். இந்து முன்னணி மாநில தலைவர் சணில்குமார் கூறுகையில், அங்கன்வாடி இடத்தில் சர்ச் அமைக்கும் முயற்சி குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். சர்ச் அகற்ற போலீசார் கால அவகாசம் கேட்டுள்ளனர் என கூறினார். இந்நிலையில், பெரியார் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், இன்று 15ம் தேதி, ஊர் நலன் காக்க அமைதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக நோட்டீஸ் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அமைதி ஊர்வலம் நாகமுத்துமாரியம்மன் கோவில் இன்று மாலை 5:30 மணிக்கு துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை