உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிதித்துறை செயலர் அதிரடி... உத்தரவு :முதல்வரின் ஆதங்கம் எதிரொலி

நிதித்துறை செயலர் அதிரடி... உத்தரவு :முதல்வரின் ஆதங்கம் எதிரொலி

புதுச்சேரி: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கோப்புகள் சுற்றலில் விடுவதாக முதல்வர் ரங்கசாமி ஆதங்கப்பட்டதை தொடர்ந்து கோப்புகளை விரைந்து அனுப்ப அனைத்து துறை அதிகாரிகளுக்கு நிதித்துறை செயலர் அதிரடி உத்தரவிட்டார். திருபுவனை எம்.எல்.ஏ.,வான த.வெ.க.,வைச் சேர்ந்த சாய்சரவணன்குமார் நேற்று முன்தினம் சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகம் கூட வழங்கவில்லை என்றார். அருகாமையில் 4,000 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட தமிழகத்தை சேர்ந்த கடலுார் மாவட்டத்தில் மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தான் உள்ளனர். அனைத்து வேலைகளும் முறையாக நடக்கிறது. ஆனால், 492 ச.கி.மீ., பரப்பளவு கொண்ட புதுச்சேரியில் 20க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். ஆனால், எந்த வேலையும் நடக்கவில்லை, என்றார். உடன் ஆதங்கப்பட்ட முதல்வர் ரங்கசாமி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் நிலை வேறு, புதுச்சேரியின் நிலை வேறு. இங்கு எல்லாமே கவர்னர் தான். எந்த கோப்பு அனுப்பினாலும், சுற்றி, சுற்றி குறி போட்டு திரும்பி எனக்கே வருகிறது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எல்லாம் 'என்ஜாய்' பண்ணதான் புதுச்சேரிக்கு வருவதாக ஆதங்கப்பட்டார். முதல்வரின் இந்த ஆதங்கம் நாளிதழ்களில் நேற்று வெளியானது. மேலும், சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பேசு பொருளாகியது. அதனைத் தொடர்ந்து நிதித்துறை செயலர் கிருஷ்ணன் மோகன் உப்பு நேற்று அனைத்து துறை செயலர்கள் மற்றும் இயக்குனர்களை அழைத்து எந்தந்த துறைகளில் எந்தந்த கோப்புகள் எதனால் நிலுவையில் உள்ளது என, விசாரணை மேற்கொண்டார். ஒவ்வொரு துறையிலும் கோப்புகள் கீழ் மட்டத்திலேயே நிலுவையில் இருப்பது உறுதியானது. குறிப்பாக கல்வித்துறையில் மாணவர்களுக்கு வழங்கி வேண்டிய நோட்டு, புத்தகம், காலணி, டைரி, அடையாள அட்டை, சீருடை, புத்தகப்பை போன்ற நலத்திட்டங்களுக்கான கொள்முதல் கோப்புகள் பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முக்கிய காரணம், இந்த கொள்முதல் கோப்புகளை தயாரிக்க வேண்டிய அரசு நிதி சட்டங்களை பயின்ற எல்.டி.சி., யூ.டி.சி., பணியிடங்களில் ஆசிரியர்கள் பணியில் இருப்பதால், கோப்புகள் தயாரிப்பதில் தாமதமாவதோடு, தவறுகள் ஏற்பட்டு பல்வேறு நிலைகளில் அதிகாரிகளால் குறி போட்டு தேக்கமடைவது தெரிய வந்தது. நிலமையை உணர்ந்த நிதித்துறை செயலர், அனைத்து கொள்முதல் கோப்புகளையும் விரைவாக பரிந்துரை செய்யவும், சந்தேகம் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரியோடு என்னை நேரில் சந்தித்து விளக்கம் பெற்று கோப்புகளை விரைவாக அனுப்ப உத்தரவிட்டார். புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து முதல்வரின் ஆதங்கத்தை தொடர்ந்து நிதித்துறை செயலரின் அதிரடி நடவடிக்கை அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ