ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு எதிரொலி பிரிந்த பா.ம.க., நிர்வாகிகளை ஒன்றிணைக்க தீவிரம்
–நமது நிருபர்–: தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனரை அன்புமணி சந்தித்த நிலையில், பிரிந்த கட்சி நிர்வாகிகளை மீண்டும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ராமதாஸ் இறங்கியுள்ளார். பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கட்சி இரு அணியாக செயல்பட்டது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ராமதாஸ், சசிகலாவுடன் கூட்டணி அமைத்து 27 இடங்களில் போட்டியிட்டார். அன்புமணி அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து 28 இடங்களில் போட்டியிட்டார். அன்புமணி தலைமையிலான பா.ம.க., மட்டும் 4 இடங்களில் வெற்றி பெற்றது. இதே நிலை நீடித்தால், பா.ம.க.,விற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கட்சி நிர்வாகிகள் கவலையடைந்தனர். இந்நிலையில், சென்னையில் வசிக்கும் ராமதாசின் இரண்டாவது மகளான கவிதா மூலம் குடும்ப உறுப்பினர்கள் மூலம், ராமதாஸ் – அன்புமணி சமாதானம் செய்யும் முயற்சி மேற்கொள்ளபட்டது. அதன் விளைவாக, ராமதாசின் 61வது திருமண நாள் கடந்த 24ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அன்புமணி குடும்பத்தினர், மகள் கவிதா குடும்பத்தினர் அனைவரும் சென்னையிருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து, ராமதாஸ் – சரஸ்வதி தம்பதியிடம் ஆசி பெற்றனர். இந்த சந்திப்பின் போது, ராமதாசும் அன்புமணியும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி கண்ணீர் விட்டனர். இதன் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டாக இருவருக்கும் இடையே இருந்து வந்த மனக்கசப்பு முடிவிற்கு வந்தது. இந்த நிகழ்விற்குப் பின், ராமதாஸ், தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த முக்கிய நிர்வாகிளை தோட்டத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். அதில் மீண்டும் இருவரும் ஒன்றாக சேர்ந்து அரசியல் பயணத்தை தொடர ஆதரவு கொடுத்ததைத் தொடர்ந்து, இனி கட்சியில் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என ராமதாஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அதன் எதிரொலியாக ராமதாஸ், அன்புமணி தரப்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளதால், இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வரும் ஜூலை 4ம் தேதிக்கு பிறகு, சென்னையில் மாநில அளவில் கட்சி நிர்வாகிகள் இணைவு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ராமதாசை சந்திக்கும் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் ராமதாஸ் – அன்புமணி சந்திப்பிற்கு பிறகு, ராமதாசை சந்திக்குமாறு அன்புமணி பா.ம.க., எம்.எல்.ஏ., 4 பேருக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் சவுமியா சந்தித்து விட்டதால் மீதமுள்ள 3 எம்.எல்.ஏ.,க்கள் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்திக்க உள்ளனர். இதேபோல் அன்புமணி ஆதரவு நிர்வாகிகளும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.