ஆடிப்பட்ட காய்கறி சாகுபடிக்கான முன்பருவ பயிற்சி முகாம் நிறைவு
புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், ஆடிப்பட்டம் காய்கறி சாகுபடிக்கான முன் பருவ பயிற்சி முகாம் கடந்த 24ம் தேதி, பூரணாங்குப்பம் கிராமத்தில் துவங்கியது. துறை இயக்குனர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். இணை வேளாண் இயக்குனர் சண்முகவேலு ‘ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடியின் அவசியம்’ குறித்து பேசினார். தொடர்ந்து, தவளக்குப்பம், உறுவையாறு, பாகூர், கூனிச்சம்பட்டு, கன்னியக்கோயில், சந்தைபுதுக்குப்பம், காலாப்பட்டு மற்றும் தொண்டமாநத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இப்பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இதன் நிறைவு விழா, ஏரிப்பாக்கம் கிராமத்தில் நடந்தது. தோட்டக்கலை இணை வேளாண் இயக்குனர் சண்முகவேலு தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். துணை வேளாண் இயக்குனர் சிவசுப்ரமணியன், ‘தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டங்கள் மற்றும் மாநில அரசு மானியத் திட்டங்கள்’ குறித்து பேசினார். பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் காய்கறி சாகுபடிக்கான நவீன தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சியளித்தனர். வேளாண் அலுவலர் அருணா ‘மண் ஆரோக்கிய அட்டை மற்றும் சமச்சீர் உர மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி விதைகள் அடங்கிய சிறு தொகுப்பு வழங்கப்பட்டது. வேளாண் அலுவலர் திருநாடன் நன்றி கூறினார். 10 நாள் நடந்த பயிற்சி முகாமில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.