உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு அதிகாரிகள் மீது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

அரசு அதிகாரிகள் மீது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் எதிரே பேனர் அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சங்கர், பாலாஜி, பச்சையப்பன், ராமன் முன்னிலை வகித்தனர்.  அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் முனுசாமி, செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் சிவஞானம் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எழில்வண்ணன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். சங்கத்தின் பொருளாளர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.  ஆர்ப்பாட்டத்தில், கடந்த 2ம் தேதி பொதுப்பணித்துறை மத்தியக் கோட்டத்தின் செயற்பொறியாளர் மற்றும் ஊழியர்கள், கலெக்டர் அறிவுறுத்தலின்படி, வழுதாவூர் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சில அடையாளம் தெரியாத நபர்கள், செயற்பொறியாளர் சீனிவாசன், இளநிலைப் பொறியாளர் கார்த்திகேயன், ஓவர்சியர் செம்மல் மற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை திட்டி, தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியுள்ளனர்.  இச்சம்பவத்தின் போது, அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத போலீசாரை கண்டித்தும், அரசு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு அதிகாரிகளை பணியை செய்ய விடாமல் தடுத்ததோடு, அவர்கள் மீது வன்முறை தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை