புதுச்சேரி விமான நிலையம் இடமாற்றமா? கவர்னர் கைலாஷ்நாதன் பளீச்
புதுச்சேரி : புதுச்சேரியில் போயிங் உட்பட பெரிய விமானங்கள் இறங்கும் வகையில் திட்டமிட்டு வருகிறோம். நிலம் கையகப்படுத்துவதை பொருத்து, விமான நிலையம் வேறு இடத்துக்கு கொண்டு செல்வது குறித்து முடிவு செய்யப்படும் என கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.புதுச்சேரியிலிருந்து விமானங்களை பெங்களூரு, ஐதராபாத்துக்கு இயக்குவதை கடந்த மார்ச் 30ம் தேதியுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுத்தியது. கடந்த ஆறு மாதங்களாக விமானங்கள் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படவில்லை. மீண்டும் விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் சாத்திய கூறுகள் குறித்து கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஏ.எப்.டி., சுதேசி, பாரதி பஞ்சாலைகளையும் ஆய்வு செய்தார்.கவர்னர் கைலாஷ்நதான் கூறியதாவது: விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். தற்போது புதுச்சேரி விமான நிலையத்தில் சிறிய ரக விமானங்கள் தான் இறங்க முடியும். எனவே புதுச்சேரி விமான நிலையத்தில் போயிங் உட்பட பெரிய விமானங்கள் இறங்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான நிலத்தை கையகப்படுத்துவது முக்கியம்.தமிழகம், புதுச்சேரியில் எவ்வளவு நிலம் தேவை என்பதை முழுதும் ஆராய வேண்டும். இதில் புதுச்சேரிக்கு எவ்வளவு உபயோகமாக இருக்கும் என்பதையும் ஆராய வேண்டும். இதன் மூலம் மக்கள் வேலைவாய்ப்பு, புதுச்சேரிக்கான பயன் தொடர்பாகவும் ஆராயப்படும். அதன் பிறகே விமான நிலையம் இட மாற்றம் குறித்து ஆராயப்படும்.பஞ்சாலைகள் புதுச்சேரிக்கு எவ்வாறு உபயோகமாக இருக்கும். சில தொழிற்சாலைகளிலேயே மாற்றிக்கொள்ளலாமா. புதுச்சேரி நகரத்துக்கு வேறு ஏதேனும் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தலாமா என, ஆராய்ந்து வருகிறோம். இங்குள்ள நகர வனத்தை இன்னும் எவ்வாறு மேம்படுத்தலாம். கிரீன் லங்ஸ் பார்த் சிட்டி' திட்டத்தை எப்படி கொண்டு வருவது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். முழுமையான ஆய்வுக்கு பின், என்ன செய்யலாம் என்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார். ஆய்வின்போது எம்.எல்.ஏக்கள் கல்யாண சுந்தரம், வைத்தியநாதன் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.
பிரதமருடன் சந்திப்பு ஏன்?
கவர்னர் கைலாஷ்நாதன் கூறுகையில், 'பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சந்திப்பு பற்றி கேட்டதற்கு, மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். எந்த ஒரு ஆலோசனையும் செய்யவில்லை' என்றார்.