ரூ.40 லட்சம் நகை திருடிய நபரை பிடிக்க புதுச்சேரி போலீசார் ஆந்திரா விரைவு
புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில், பூட்டிய வீட்டில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிய மர்ம நபரை பிடிக்க, தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.புதுச்சேரி ரெட்டியார்பாளையம், விவேகானந்தர் நகர் விரிவாக்கம் 3வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன், 67; விழுப்புரத்தில் டயர் ரீட்ரேடிங் கம்பெனி நடத்தி வந்த இவர், வயது முதிர்வு காரணமாக, தொழிலை கைவிட்டு, வீட்டில் இருந்து வருகிறார். தனது மகளை சென்னையில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, மனைவி சூரியபாலாவுடன் வசித்து வருகிறார்.இவர்கள், கடந்த மாதம் 16ம் தேதி, வீட்டை பூட்டிக்கொண்டு, சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றனர். சில தினங்கள் கழித்து, அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.இது குறித்து, ஸ்ரீதரன் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர், ஆந்திர மாநிலத்தில் இருப்பதாக, ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு ரகசிய தவகல் கிடைத்தது. அவரை பிடிக்க புதுச்சேரி தனிப்படை போலீசார், ஆந்திரா விரைந்துள்ளனர்.