உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு புதுச்சேரி வாலிபரிடம் ரூ. 24 லட்சம் மோசடி

போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு புதுச்சேரி வாலிபரிடம் ரூ. 24 லட்சம் மோசடி

புதுச்சேரி: போலி ஆன்லைன் வர்த்தகத்தை நம்பி, புதுச்சேரி வாலிபர் ரூ. 24 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். குயவர்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மொபைல் எண்ணை, மர்ம நபர்கள் வர்த்தக முதலீடு தொடர்பான வாட்ஸ் ஆப் குழுவில் இணைத்தனர். அதில், ஆன்லைன் வர்த்தகத்தில் எப்படி முதலீடு செய்து, அதிக லாபம் சம்பாதிக்கலாம், முதலீடு செய்வதற்கான இணையதள விபரங்கள் பதிவிடப்பட்டிருந்தது.அதனை நம்பிய மோகன்தாஸ், அதில் குறிப்பிட்டிருந்த ஆன்லைன் வர்த்தகத்தில் 23 லட்சத்து 99 ஆயிரத்து 998 ரூபாயை முதலீடு செய்தார். அதில் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, அந்த போர்ட்டல் முடக்கப்பட்டிருந்தது. அதன்பிறகே, அது போலி என்றும், மோசடி கும்பலிடம் பணத்தை இழந்ததும் தெரியவந்தது.இதேபோல், காரைக்கால் கீழ்வெளியை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, 3 லட்சத்து 65 ஆயிரத்து 900 ரூபாயை இழந்தார்.புதுச்சேரி, பிப்டிக் தொழிற்பேட்டையை சேர்ந்தவர் பிரசன்னா. இவர், ஆன்லைனில் விலை உயர்ந்த கார் விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்தார். அதில், இருந்த மொபைல் எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர், காருக்கான பணத்தை செலுத்தினால், உடனடியாக டெலிவரி செய்வதாக கூறினார். அதனை நம்பி, பிரசன்னா ரூ. 11 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை அந்த நபரின் அக்கவுண்டிற்கு அனுப்பினார். ஆனால், கார் டெலிவரி செய்யப்படவில்லை. பிறகு, அந்த மர்ம நபரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.கொம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை, மொபைலில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி மேலாளர் போல் பேசி, ஏ.டி.எம்., கார்டு விவரங்கள் மற்றும் ஓ.டி.பி., எண்ணை பெற்று, அவரது அக்கவுண்டில் ரூ.15 ஆயிரத்தை எடுத்து ஏமாற்றினார். மூலக்குளத்தை சேர்ந்த பரத் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் 2 லட்சம் வரை ஆன்லைன் லோன் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பி, அவர் விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்தும் படி கேட்டுள்ளனர். அதை நம்பி, பரத் 13 ஆயிரத்து 749 ரூபாயை மர்ம நபருக்கு அனுப்பி ஏமாந்தார்.இதே போல், வில்லியனுார் அனு 1,899, தட்டாஞ்சாவடி அய்யப்பன் 3,150 என, 7 பேர், 39 லட்சத்து 59 ஆயிரத்து 698 ரூபாயை ஆன் லைன் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை