வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி; கலெக்டர் ஆய்வு
திருக்கனுார் திருக்கனுாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு முகாம்களை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார். புதுச்சேரி மாவட்ட தேர்தல் துறை சார்பில் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தும் சிறப்பு முகாம் நேற்று முன்தினம், நேற்று என இரு நாட்கள் நடந்தது. .இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம், உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் நடந்த சிறப்பு முகாமை மாவட்ட தேர்தல் அதிகாரி, கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார். அப்போது, ஊழியர்களிடம் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக வந்துள்ள விண்ணப்பங்களின் விவரங்களை கேட்டறிந்தார்.தொடர்ந்து, பள்ளியின் வகுப்பறைக்கு சென்று, மாணவர்களின் கல்வித்தரம், ஸ்மார்ட் வகுப்பறை செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மாணவர்களுடன் கலந்துரையாடினர்.இதேபோல்,புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள சுசிலாபாய் அரசு பெண்கள் துவக்கப் பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில், நடந்த வாக்காளர் திருத்தப்பணி சிறப்பு முகாமில் திரளான பொதுமக்கள் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.