ரூ.13,600 கோடி பட்ஜெட் : இன்று முதல்வர் தாக்கல்
புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ. 13,600 கோடிக்கான முழு பட்ஜெட்டினை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்கிறார்.புதுச்சேரி சட்டபையின் கூட்டத் தொடர் நேற்றுமுன்தினம் கவர்னர் உரையுடன் துவங்கியது. இரண்டாம் நாள் நேற்று கவர்னர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.,க்கள் பேசினர்.இன்று காலை 9:30 மணிக்கு புதுச்சேரி அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 13,600 கோடிக்கு முழு பட்ஜெட்டினை தாக்கல் செய்ய உள்ளார். வரியில்லாத பட்ஜெட்டினை முதல்வர் ரங்கசாமி தொடர்ந்து தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டிலும் வரிகள் இருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து நாளை 13ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. தொடர்ந்து, 3 நாட்கள் விடுமுறைக்கு பின், மீண்டும் 17ம் தேதி சட்டசபை கூடி 21ம் தேதி வரை நடக்கிறது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை சட்டசபை நடக்கிறது. ஒட்டுமொத்தமாக 13 நாட்கள் சபை நடக்கிறது.அடுத்த ஆண்டு புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எனவே இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். இதனால் சட்டசபை தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட உள்ள இப்பட்ஜெட் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட்டில் பல்வேறு புதிய மக்கள் திட்டங்கள், சலுகைகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட் தாக்கலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபையை சுற்றிலும் உள்ள வீதிகளில் பேரிகார்டுகள் போட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சட்டசபை வளாகத்தில் அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.