உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பதில் சொல்; பரிசு வெல் தினமலர் மெகா வினாடி வினா போட்டி ஆரவாரத்துடன் ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் துவங்கியது

பதில் சொல்; பரிசு வெல் தினமலர் மெகா வினாடி வினா போட்டி ஆரவாரத்துடன் ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் துவங்கியது

புதுச்சேரி : 'தினமலர். புதுச்சேரி பதிப்பின் இந்தாண்டிற்கான 'பதில் சொல்; பரிசு வெல்' மெகா வினாடி வினா போட்டி நேற்று புதுச்சேரி ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் ஆரவாரத்துடன் துவங்கியது.புதுச்சேரி, தமிழக பள்ளி மாணவர்களுக்காக 'தினமலர்-பட்டம்' இதழ் சார்பில், 'பதில் சொல்; பரிசு வெல்' என்ற தலைப்பில் வினாடி -வினா போட்டிகள், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி பதிப்பு சார்பில் இந்தாண்டு மெகா வினாடி வினா போட்டி, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் 160 பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது.இதனை 'தினமலர்-பட்டம்' இதழுடன், புதுச்சேரி ஆச்சாரியா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகின்றது. இந்த மெகா வினாடி வினா போட்டி, புதுச்சேரி பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது. முதல் பள்ளியாக புதுச்சேரி தேங்காய்திட்டு ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் வினாடி வினாடி போட்டிக்கான தகுதி சுற்றாக முதல் நிலை தேர்வு நடந்தது.இதில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை பயிலும் 600 மாணவர்கள பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு 20 நிமிடங்கள் தேர்வு நடந்தது. அதிக மதிப்பெண் அடிப்படையில் தலா 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான வினாடி வினா போட்டி துவக்க நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களான 'தினமலர் வெளியிட்டாளர் கே.வெங்கட்ராமன், சப் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு, ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து, 16 மாணவர்களும் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி வினா போட்டி மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் 8 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த எட்டு அணியினருக்கும், 'சாய்ஸ்' அடிப்படையில், வினாக்கள் கேட்கப்பட்டன. அதன்பின், அனைத்து அணியினருக்கும் பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டு, அதில், முதலில் பதில் சொல்லும் அணிக்கு, மதிப்பெண் தரப்பட்டது.சவாலான கேள்விகளை அசத்தலாக எதிர்கொண்டு மாணவர்கள் பதிலளித்தனர். இறுதியில் பிளஸ்1 மாணவி மோனிஷா, ஒன்பதாம் வகுப்பு மாணவி பத்மபிரியை ஆகியோர் அடங்கிய அணி 25 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியது. பிளஸ் 1 மாணவிகள் சங்கரபாண்டியம்மாள், ஜானவி ஆகியோர் அடங்கிய மற்றொரு அணி 20 மதிப்பெண்களுடன் இரண்டாம் பிடித்தது. முதல் இரு இடம் பிடித்த அணிகள் மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடக்கும் அடுத்த சுற்றுக்கு தேர்வானது.சில கேள்விகளுக்கு பார்வையாளர் இடத்தில் இருந்த மாணவர்கள் பதில் சொல்லி பாராட்டுதலை பெற்றனர். வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், சப் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு, ஆச்சாரியா உலக தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் நினைவு பரிசு வழங்கினார். மேலும், வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினர்.இதேபோல் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மீதமுள்ள பள்ளிகளில் நடக்கும் 'தினமலர்-பட்டம்' இதழ் மெகா வினாடி வினா போட்டிகளில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், மாநில அளவிலான அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதில் முதலிடம் பிடித்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு அசத்தலான, அமர்க்களமான பரிசுகள் காத்திருக்கின்றது.

அடுத்த போட்டிகள் எங்கே

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி வரும் 3ம் தேதி விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும், 4ம் தேதி கடலுார் செம்மண்டலம் கிருஷ்ணசாமி மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும், 6ம் தேதி ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும், 9 தியாகதுருவம் மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கின்றது.

'தினமலர்-பட்டம்' இதழ்

பள்ளி பாட புத்தகங்களையும், பொது அறிவு விஷயங்களை 'தினமலர்-பட்டம்' இதழ் எளிமைப்படுத்தி, தாய் மொழியான தமிழில் அளித்து வருகிறது. இந்தியாவில், வேறு எந்த மாநில மொழியிலும், இது போன்ற முயற்சி நடைபெறவில்லை. தமிழில் தான், முதன்முறையாக, இத்தகைய மாணவர் நாளிதழ், நடத்தப்பட்டு வருகிறது.தமிழகம், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்துத் தரப்பினரின் பேராதரவோடு பட்டம் இதழ் பீடுநடை போட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் பொது அறிவு, அறிவியல் தகவல்கள் ஆகியவற்றுடன் கூடிய, நுண்ணறிவை வளர்க்கும் வகையில், பட்டம் இதழில் செய்திகளும், அரிய தகவல்களும் இடம் பெறுவதால் இன்றைய தலைமுறையினருக்கு அறிவு பெட்டகமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ