புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் கல்வி சுற்றுலா
அரியாங்குப்பம் : புதுச்சேரி பல்கலைக்கழகத்தை பற்றி தெரிந்து கொள்ள, அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒரு நாள் கல்வி சுற்றுலா சென்றனர்.சமகிரா சிக் ஷா திட்டத்தின் கீழ், புதுச்சேரி பல்கலைக்கழகத்தை தெரிந்து கொள்ளவும், அங்குள்ள பல்வேறு துறைகளை பற்றி தெரிந்து கொள்ளவும், கல்வித்துறை சார்பில், பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, பள்ளி மாணவர்கள் ஒரு நாள் கல்வி சுற்றுலா சென்றனர். பல்கலைக்கழகத்திற்கு சென்ற மாணவர்கள், கடல்சார் ஆய்வு மையம், சமூக அறிவியல் மற்றும் பன்னாட்டு கல்வித்துறை, சமூகவியல்துறை, பல்லுயிர் பெருக்கத்துறை, மாசுக்கட்டுபாடு, சுற்றுச்சூழல் பொறியியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டு, பேராசிரியர்களுடன் கலந்துரையாடினர். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சகாயமேரி பாத்திமா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அரவிந்தராஜா, ஆசிரியர்கள் மேகலாதேவி, ராஜலட்சுமி, கலா, உடற்கல்வி ஆசிரியை அமுதா, ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.