மந்தைவெளியை மீட்க வேண்டி ஊராட்சி தலைவர் போலீசில் புகார்
வானூர்: தனி நபர்களிடம் இருந்து மந்தைவெளியை மீட்டு தர வேண்டி, ஊராட்சி தலைவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் ஊராட்சியை சேர்ந்த மொரட்டாண்டியில் ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வரும் பகுதியில் மந்தைவெளி உள்ளது. அங்க, விநாயகர் கோவில், ஊராட்சிக்கு சொந்தமான கிணறு, மோட்டார் கொட்டகை உள்ளிட்டவை உள்ளது. இந்நிலையில், அந்த இடத்தை தனி நபர்கள் உரிமை கோரி வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஆகியோர் கலெக்டருக்கு மனு அளித்திருந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த இடத்தில் உள்ள விநாயகர் கோவில், கிணறு, மோட்டார் கொட்டகையை சிலர் பொக்லைன் மூலம் அகற்றிவிட்டு, மதில் சுவர் எழுப்ப முயன்றனர். இதனால் அப்பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்னை எழுந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் நேற்று ஊராட்சி தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஆகியோர் தலைமையில் ஆரோவில் போலீசில், மந்தைவௌி இடத்தை மீட்டு தர வேண்டி மனு அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.