மூன்று அரசு மருத்துவமனைகளில் ரூ. 92 கோடியில் அதி தீவிர சிகிச்சை பிரிவு
பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் அறிவிப்புகள்;இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில், முழுமையான தானியங்கி உயிர் வேதியியல் பகுப்பாய்வு, நோய் எதிர்ப்பு பகுப்பாய்வு, தானியங்கி மின்னாற்பகுப்பு அமைப்பு அமைக்கப்பட உள்ளது. எலும்பு முறிவு மற்றும் பிற விபத்துகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக வலி நிவாரண பிரிவு அமைக்கப்படும்.அறுவை சிகிச்சை மையங்களில் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் உபகரணங்கள் நிறுவப்படும். செயற்கை முறை கருத்தரித்தல், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யும் நவீன உட்கட்டமைப்புகள் துவங்கப்படும்.பாகூர், தட்டாஞ்சாவடி, மண்ணாடிப்பட்டு, காட்டேரிக்குப்பம் மற்றும் கலித்தீர்த்தாள்குப்பம் சுகாதார நல மையங்களுக்கு புதிதாக கட்டடங்கள் கட்டப்பட உள்ளது. கோபாலன்கடை பகுதியில் புதிய துணை சுகாதார மையம் அமைக்கப்படும்.மத்திய அரசின் தேசிய ஆயுஷ் இயக்க திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 28 ஆயுஷ் மையங்களில் தசை நார் நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தில், துணை பல் மருத்துவ பிரிவும், காரைக்காலில் 12 ஆரம்ப சுகாதார மையங்களில் தானியங்கி பகுப்பாய்வு,மாகியில் டயாலிசிஸ் பிரிவு துவங்கப்படும். ஏனாம் பொது மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு புனரமைக்கப்பட்டு, டயாலிசிஸ் பிரிவு துவங்கப்படும். சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, மொபைல் எக்ஸ்ரே உபகரணங்கள் வாங்கப்படும்.மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.92 கோடி மதிப்பீட்டில் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லுாரி, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில், அதி தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும்.