இன்ஜினியரிங் படிப்புகளுக்கு இன்று இறுதி கட்ட கலந்தாய்வு
புதுச்சேரி: அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சுய நிதி பி.டெக்., இடங்களுக்கு இன்று 4 பிராந்தியங்களிலும் மாப் அப் கவுன்சிலிங் நடக்கிறது.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் காலியாக உள்ள பி.டெக்., இடங்களுக்கு சென்டாக் இதுவரை மூன்று கட்ட கலந்தாய்வு நடத்தியுள்ளது.அடுத்து மாணவர்களை நேரில் அழைத்து இறுதி கட்ட மாப்-அப் கவுன்சிலிங் இன்று 13ம் தேதி புதுச்சேரியில் காமராஜர் மணிமண்டபம், காரைக்காலில் காமராஜர் பொறியியல் கல்லுாரி, மாகி, ஏனாமில் அரசு கலை கல்லுாரிகளில் நடக்கிறது. இதற்கான புதுச்சேரி அரசு, தனியார் பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சுயநிதி இடங்களின் விபரம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.காலை 9:30 மணிக்கு துவங்கும் முதல் அமர்வு கலந்தாய்வு ஜே.இ.இ., மதிப்பெண் அடிப்படையிலும், 10:30 மணிக்கு பிற மாநில மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. அதன்பின் பின் புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சுயநிதி இடங்களுக்கான கலந்தாய்வு 11:30 மணிக்கு நடக்கிறது. கட் ஆப் மதிப்பெண் 99.999 முதல் 85 வரையுள்ள மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.12:30 மணிக்கு கட் ஆப் மதிப்பெண் 84.999 முதல் 80 வரை, 2:00 மணிக்கு 79.999 முதல் 75 வரை, 3:00 மணிக்கு 74.999 முதல் 70 வரை, 4:00 மணிக்கு 69.999 முதல் 64 வரை, 5:00 மணிக்கு - 64.999 முதல் 60 வரை, மாலை 6:00 மணிக்கு 59.999 முதல் 40 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.மாணவர்கள் கலந்தாய்வுக்கு முன் காலியிடங்களை பார்வையிட்டு, அனைத்து சான்றிதழ்களுடன் வர வேண்டும். கவுன்சிலிங்கிற்கு 30 நிமிடங்களுக்கு முன் வர வேண்டும் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.