வெளிப்படையான பணி நியமனம் அரசு கொறடா ஆறுமுகம் பாராட்டு
புதுச்சேரி: கவர்னர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது அரசு கொறடா ஆறுமுகம் பேசியதாவது: பட்ஜெட் உரையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப தலைவிக்கு மாதாந்திர நிதி உதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டுக்குரியது. பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய், விவசாயிகளுக்கு ெஹக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் அரசு சரியான நேரத்தில் வழங்கியுள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள 2,444 பணியிடங்கள் நேரடி மற்றும் வெளிப்படையான போட்டி தேர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. சேதராப்பட்டு கரசூர் பகுதியில் தொழில் பூங்கா அமைப்பது, மூட்பட்ட மில் வளாகத்தில் பிரதமரின் ஏக்தா மால் வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை எடுத்தற்கு நன்றி. முதல்வரின் எரிவாயு திட்டத்தால் அனைவரும் பயனடைந்து வருகின்றனர். பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவன உதவியுடன் ரூ.534 கோடி குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் பிரச்னை தீரும். குடிநீர் மற்றும் விவசாய நோக்கங்களுக்காக புதுச்சேரி பகுதியில் உள்ள 78 குளங்களை பழுது பார்த்தல், புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது பாராட்டுக்குரியது.விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடையும் வகையில் அவர்கள் பெற்ற அசல், வட்டி, அபராத தொகை ரூ.11.61 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதற்கு நன்றி.