டாடா ஏஸ் வாகனங்களுக்கு அடிக்காசு வசூலிப்பது நிறுத்தம் உழவர்கரை நகராட்சி அதிரடி
புதுச்சேரி : புதுச்சேரியில் சாலையோரம் தெருவோர வியாபார வியாபாரிகள் தள்ளுவண்டி, டாடா ஏஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்கின்றனர். இந்த தெருவோர வியபாரிகளை நகராட்சிகள் ஒழுங்குபடுத்தியுள்ளன. சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்துவிட்டு அவர்கள் வாகனங்களை தினமும் எடுத்து சென்றுவிட வேண்டும். ஆனால் வாகனங்களை எடுக்காமல் அப்படியே அனைத்து சாலைகளிலும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சாலைகள் குறுகிபோய் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது.இந்த வாகனங்களை சாலையோர பாதுகாப்பு கமிட்டி அகற்ற சென்றாலும், நாங்கள் நகராட்சி அடிகாசு கொடுத்து தான் கடைகளை நடத்துகின்றோம். அப்புறம் எதற்காக கடைகளை அகற்றுகின்றீர்கள் என எதிர் கேள்வியை எழுப்புகின்றனர். இதன் காரணமாக சாலையோரம் உள்ள டாடா ஏஸ் உள்ளிட்ட வாகனங்களை அகற்றுவதில் தொடர்ந்து சிக்கல் எழுந்து வருகின்றனர். இதற்கிடையில், சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூராக உள்ள டாடா ஏஸ் வாகனங்களை அகற்றும் வகையில் அதற்கு அடிக்காசு வசூலிப்பதை உழவர்கரை நகராட்சி நிறுத்தியுள்ளது. வாகனங்களை அகற்றுவது குறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனங்களை கணக்கெடுத்து போக்குவரத்து துறைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.இது குறித்து உழகரை நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, போக்குவரத்திற்கு இடையூராக உழவர்கரை நகராட்சி பகுதியில் 74 டாடா ஏஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை அகற்றும் வகையில் அடிக்காசு வசூலிப்பதை நிறுத்தி விட்டோம். உழவர்கரை நகராட்சி வருவாய் இழப்பு என்றாலும், சாலைபாதுகாப்பு முக்கியம். இதன் காரணமாக இந்த முடிவினை எடுத்துள்ளோம். இனி, சாலையில் டாடா ஏஸ் வாகனங்களை நிறுத்தி உழவர்கரை நகராட்சி பகுதியில் விற்பனை செய்வது சட்ட விரோதமானது. இந்த வாகனங்களை அகற்றுவது குறித்து சாலை பாதுகாப்பு கமிட்டி முடிவு செய்யும் என்றனர்.