சிறுமி பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
விழுப்புரம்: திண்டிவனம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட் தீர்ப்பு கூறியது: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பாவேந்தன் மகன் சிவா, 36; கூலி தொழிலாளி. இவர், கடந்த 2020ம் ஆண்டு அக்., 10ம் தேதி தனது பெற்றோர் இறந்த நிலையில் உறவினர் வீட்டில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். திண்டிவனம் மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து சிவாவை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம்சாட்டப்பட்ட சிவாவிற்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.