பருவமழையை எதிர்கொள்ளும் பணிகள் விறு..விறு.. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் அனைத்து வாய்க்கால்களையும் ஆய்வு செய்தார்.புதுச்சேரியில் பருவ மழையை சமாளிக்க பல்வேறு கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, துார்வாரப்படும் வாய்க்கால்கள் மற்றும் அனைத்து வாய்க்கால்களையும், மழைக்காலங்களில் நீர்த்தேங்கக் கூடிய இடங்களையும், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் பார்வையிட்டார்.மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால், உழந்தை ஏரி, அய்யனார் கோவில் வாய்க்கால், கருவடிக்குப்பம் வாய்க்கால், மழைக்காலங்களில் உபரி நீரை வெளியேற்றும் மோட்டார் பம்ப் செட்டுகளை பார்வையிட்டவர், தயார் நிலையில் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கனகனேரி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரித்து வெளியேற்றப்படும் நீரை மேட்டுவாய்க்கால் பள்ள வாய்க்கால் வழியாக வெளியேற்ற அறிவுறுத்தினார். இதன் மூலம் பாவாணர் நகர், மாரியம்மன் நகர், நடேசன் நகர், இந்திரா சதுக்கம், மரப்பாலம் சந்திப்பு போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்குவதை முற்றிலுமாக தவிர்க்கலாம்.புஸ்ஸி வீதியில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க, பழைய வாய்க்காலை முற்றிலுமாக துார்வாரி தடையின்றி தண்ணீர் ஓடச்செய்ய நடக்கும் பணிகளையும் பார்வையிட்டு, விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.கருவடிக்குப்பம் வாய்க்கால் கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியான, பழைய சாராய ஆலையின் வடக்குப் பகுதியில், வாய்க்கால் கரைகளை வலுப்படுத்தி அங்கே கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.ஆய்வின் போது நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.