10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு 123 குடிநீர் பரிசோதனை பெட்டி; முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
திருபுவனை; புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறையின் மூலம் புதுச்சேரி, காரைக்காலில் மொத்தமுள்ள 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு இரண்டாம் கட்டமாக 123 குடிநீர் கள பரிசோதனைப் பெட்டிகளை முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் வழங்கினார். மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறையின் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மொத்தமுள்ள 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு இரண்டாம் கட்டமாக குடிநீர் கள நீர் பரிசோதனைப் பெட்டிகள் வழங்கும் நிகழச்சி, பதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்வர் ரங்கசாமி தலைமையேற்று கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம நீர் மற்றும் துப்புரவுக் குழு உறுப்பினர்கள் என மொத்தம் 123 குடிநீர் கள நீர் பரிசோதனை பெட்டிகளை வழங்கினார். அமைச்சர் திருமுருகன், உள்ளாட்சித் துறை இயக்குநர் சக்திவேல், துணை இயக்குநர் (நகராட்சி) சவுந்திரராஜன், உள்ளாட்சித் துறை செயற்பொறியாளர் நாகராஜன், ஜல்ஜீவன் மிஷன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த குடிநீர் களப் பரிசோதனை பெட்டியின் மூலமாக குடிநீரில் உள்ள பி.எச்., காரத்தன்மை, கடினத்தன்மை, குளோரைடு, ஃப்ளோரைடு, அம்மோனியா, நைட்ரைட், நைட்ரேட், இரும்பு, பாஸ்பேட், குளோரின், டி.டி.எஸ்., உள்ளிட்ட 12 வகையான தரக் குறைபாடுகளை அந்த இடத்திலே கண்டறிய முடியும்.